வழுத்தூர் ஆன்லைன் தமிழ் இணையதளம்

.

மறைவு அறிவிப்பு 11-08-2009 காலை 11.30 மணிக்கு மேல வழுத்தூர் தானாவதி அப்துல் ரசூல் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்பார்ந்த வழுத்தூர் வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த வழுத்தூர் ஆன்லைன் இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
திருமணம், மறைவு மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்கப்படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வழுத்தூர் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் வழுத்தூர் வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளை தெரிந்து கொள்ள உதவுங்கள்.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி



நபிவழியில் நம் ஹஜ்


صفة حجة النبي صلى الله عليه وسلم


"ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறில்லை" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதனை நீங்கள் அடைய வேண்டுமானால் இரண்டு நிபந்தனைகளை, பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும்.
முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது)
இரண்டாவது நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாமல் இன்று பல ஹாஜிகள், ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபியவர்கள் செய்த ஹஜ்ஜை சுருக்கமாகச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.


என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே இதைப்படித்து நபியவர்களின் ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று "அன்று பிறந்த பாலகனை" போன்றும், ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக.


உம்ராச் செய்யும் முறை


உம்ரா செய்வதற்கு முன் குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் உடையை அணிந்த பின் "லப்பைக்க உம்ரத்தன்" என்று உரிய எல்லையிலிருந்து (மீக்காத்திலிருந்து) நிய்யத்து வைத்துக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட வேண்டும். (இலங்கை, இந்தியாவிலிருந்து வருபவர்களின் எல்லை யலம்லம்) இஹ்ராம் அணியும் எல்லைக்குள் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து நிய்யத்து வைத்துக் கொள்ள வேண்டும். இஹ்ராம் உடை என்பது ஆண்களுக்கு இரண்டு தைக்கப்படாத துணிகளை அணிவதாகும். ஒரு துணியை உடுத்துக்கொள்வது, மற்ற துணியால் தன் மேனியை போர்த்திக் கொள்வது. பெண்களுக்கு தனி இஹ்ராம் உடை கிடையாது. அவர்கள் தங்களுடைய அங்கங்கள் மறையும் அளவுக்கு இஸ்லாம் அனுமதித்த எந்த ஆடையையும் அணிந்து கொள்ளலாம். மக்கா செல்லும் வரை தல்பியா சொல்லிக் கொண்டு செல்வது சுன்னத்தாகும்.
لَبَّيْكَ أَللَّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكُ، لاَشَرِيْكَ لَكَ.


லைப்பைக், அல்லாஹும்ம லைப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக்க லக்.
ஹரத்திற்குள் நுழைவதற்கு முன் தல்பியாவை நிறுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
بِسْمِ اللهِ وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ أَللَّهُمَّ إفْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ.

பிஸ்மில்லாஹ், வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ், அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக.

ஹரத்திற்குள் நுழைந்ததும் முதலில் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாப் என்பது கஃபத்துல்லாவை ஏழு முறை பரிபூரணமாகச் சுற்றி வருவதற்கு சொல்லப்படும். தவாபுக்கு ஒளு அவசியமாகும். தவாபை ஆரம்பிப்பதற்கு முன் ஆண்கள் தங்களின் வலது தோள் புஜத்தை திறந்துவிட வேண்டும். அதாவது மேனியை போர்த்தியிருக்கும் துணியின் நடுப்பகுதியை வலது கக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு அத்துணியின் இரு ஓரங்களையும் இடது தோள் மீது போட வேண்டும். அதன் பின் உம்ராவிற்குரிய தவாபை நிறைவேற்றுகின்றேன் என்ற எண்ணத்தோடு "ஹஜருல் அஸ்வத்" கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலையிலிருந்து உம்ராவின் தவாபை ஆரம்பிக்க வேண்டும். தவாபை ஆரம்பிக்கும் போது நான்கு முறைகளில் ஒன்றைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.

1- முடியுமாக இருந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது.
2- அதற்கு முடியாவிட்டால் கையினால் ஹஜருல் அஸ்வத் கல்லை தொட்டு கையை முத்தமிடுவது.
3- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லை, தடிபோன்றதால் தொட்டு அதை முத்தமிடுவது.
4- அதற்கும் முடியாவிட்டால் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை அதன்பக்கம் உயர்த்திக்காட்டி "அல்லாஹுஅக்பர்" என்று சொல்வது. (இப்போது கையை முத்தமிடக்கூடாது).

இந்நான்கில் முடியுமான ஒன்றைச் செய்துவிட்டு தவாபை ஆரம்பிக்க வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வேண்டுமென்பதற்காக மற்றவர்களை இடித்துக் கொண்டு செல்வதை ஹாஜிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவது சுன்னத்தாகும். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பது ஹராமாகும். ஹராத்தைச் செய்து சுன்னத்தை நிறைவேற்ற வேண்டுமா? குறிப்பாக பெண்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கஃபத்துல்லாவோடு சேர்ந்து ஓர் அரைவட்டம் இருக்கின்றது, அதையும் சேர்த்து தவாப் செய்ய வேண்டும், காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லைதான். ருக்னுல் யமானியை, (ஹஜருல் அஸ்வத் கல் மூலைக்கு முன்னுள்ள மூலையை) தொட வாய்ப்புக் கிடைத்தால் தொட்டுக்கொள்ள வேண்டும். அதை முத்தமிடுவதோ அல்லது தொட்டு கையை முத்தமிடுவதோ அல்லது தொட வாய்ப்புக் கிடைக்காத நேரத்தில் அதன் பக்கம் கையை உயர்த்திக் காட்டி அல்லாஹுஅக்பர் என்று கூறுவதோ கூடாது. முந்திய மூன்று சுற்றுக்களிலும் "ரம்ல்" செய்வது சுன்னத்தாகும். "ரம்ல்" என்பது கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பதற்குச் சொல்லப்படும். மற்ற நான்கு சுற்றுக்களையம் சாதாரணமான நடையில் நடப்பது. "ரம்ல்" செய்வது ஆண்களுக்கு மாத்திரம்தான் சுன்னத்தாகும். பெண்களுக்கல்ல.

ஒவ்வொரு சுற்றுக்களுக்கும் மத்தியில் குறிப்பிட்ட துஆக்கள் எதுவும் இல்லை, விரும்பிய துஆக்களைக் கேட்கலாம். தஸ்பீஹ், திக்ர் செய்தல், குர்ஆன் ஓதுதல் போன்றவைகளை, செய்து கொள்ளலாம். ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்டிருக்கும் மூலை வரையுள்ள இடத்தில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَاحَسَنَةًوَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَاعَذَابَ النَّارِ


"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்"

என்ற துஆவை ஓதுவது சுன்னத்தாகும். ஒவ்வொரு சுற்றை ஆரம்பிக்கும் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு நேராக வரும்போது தக்பீர் (அல்லாஹுஅக்பர் என்று) கூறுவது சுன்னத்தாகும். தவாப் செய்து முடிந்ததும் திறந்த வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும். பின்பு மகாமுல் இப்ராஹிமுக்குப் பின் சென்று தவாபுடைய சுன்னத் இரு ரக்அத்துகளை தொழ வேண்டும். முந்திய ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் காஃபிரூனும் (குல்யாஅய்யுஹல் காஃபிரூன்) இரண்டாவது ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவுக்குப்பின் சூரத்துல் இக்லாஸையும் (குல்ஹுவல்லாஹுஅஹது) ஓதுவது சுன்னத்தாகும். முகாமுல் இபுறாஹிமுக்குப்பின் இட நெருக்கடியாக இருந்தால் கிடைக்கும் இடத்தில் தொழுதுகொள்ளலாம்.

ஸஃயி

ஸஃயி என்பது ஸஃபா மர்வா மலைகளுக்கு மத்தியில் ஏழு சுற்றுக்கள் சுற்றுவதாகும். தவாப் முடிந்த பின் ஸஃயி செய்வதற்காக ஸஃபா மலைக்குச் செல்லவேண்டும். ஸஃபா மலையடிவாரத்தை அடைந்ததும்

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ

என்னும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிவிட்டு அல்லாஹ் எதைக்கொண்டு ஆரம்பித்தானோ அதைக் கொண்டு நாமும் ஆரம்பிப்போம் என்று சொல்லி ஸஃபா மலை மீது கஃபத்துல்லாவை பார்க்கும் அளவுக்கு ஏறி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி பெருமைப்படுத்தி அவனைப்புகழ்ந்து

لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ، لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ اْلأَحْزَابَ وَحْدَهُ

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். லாஇலாஹா இல்லல்லாஹுவஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்சாப வஹ்தஹ்.

என்னும் திக்ருகளை ஓதி இடையே துஆக்களும் செய்தார்கள். இப்படி மூன்று தடவைகள் செய்தார்கள். (அபூதாவூத், நஸாயி, இப்னுமாஜா, தாரமி, தப்ரானி)

இந்த திக்ருகளை நாமும் ஓதி இவைகளுக்கு இடையே நமக்காக துஆக்கள் செய்வதும் சுன்னத்தாகும். இன்று சிலர் தொழுகைக்குத் தக்பீர் கூறுவது போல் இரு கைகளையும் கஃபத்துல்லாவின் பக்கம் உயர்த்திக் காட்டிவிட்டுச் செல்கின்றார்கள். இது சுன்னத்தான முறையல்ல. துஆவுக்கு மாத்திரமே கையை உயர்த்த வேண்டும். பின்பு ஸஃபா மலையிலிருந்து இறங்கி மர்வாவை முன்னோக்கிச் செல்ல வேண்டும், முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரைக்கும் சிறிது வேகமாக ஓட வேண்டும். அதன்பிறகு சாதாரணமாக நடக்க வேண்டும். இப்படி வேகமாக ஓடுவது ஆண்களுக்கு மட்டும்தான் பெண்களுக்கல்ல. மர்வா மலையை அடைந்ததும் அதன்மீது ஏறி கிப்லாவை முன்னோக்கி ஸஃபா மலையில் செய்தது போன்றே செய்வது சுன்னத்தாகும். இத்தோடு ஒரு சுற்று முடிவுறுகின்றது. பின்பு மர்வாவிலிருந்து ஸஃபா வரைக்கும் செல்வது, இங்கும் இரு பச்சை விளக்குகளுக்கு மத்தியில் சற்று வேகமாக ஓடுவது சுன்னத்தாகும். ஸஃபா மலையை அடைந்தால் இரண்டாவது சுற்று முடிவுறுகிறது. இப்படி ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும், மர்வாவில்தான் கடைசிச் சுற்று முடிவுறும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையில் தனிப்பட்ட பிரார்த்தனைகள் இல்லை.

விரும்பிய பிரார்த்தனைகள், திக்ருகள், குர்ஆன் போன்றவைகளை ஓதலாம். இப்படிப்பட்ட சிறப்பான இடங்களில் மனமுருக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தியுங்கள். தவாப் மற்றும் ஸஃயியை கீழ் தளத்தில் செய்ய முடியாவிட்டால் (கூட்டமாக இருந்தால்) மேல்மாடியில் செய்து கொள்ளலாம்.

ஸஃயின் ஏழு சுற்றுக்களும் முடிவடைந்தபின் ஆண்கள் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும், இதுவே சிறந்த முறையாகும். மொட்டை அடிக்காதவர்கள் முடியை குறைத்துக் கொள்ள வேண்டும். முடியை குறைத்துக் கொள்வதென்பது இரண்டு அல்லது மூன்று இடங்களில் சில முடிகளை மட்டுமே கத்தரிப்பது என்பதல்ல, மாறாக தலையில் உள்ள எல்லா முடிகளும் கொஞ்ச அளவுக்காவது கத்தரிக்கப்பட வேண்டும், இதுவே நபிவழியாகும். பெண்கள் தங்களின் தலைமுடியின் நுனியில் விரல் நுனியளவுக்கு வெட்டிக் கொள்ள வேண்டும், இதுவே அவர்களுக்கு சுன்னத்தான முறையாகும், இத்துடன் உம்ராவின் செயல்கள் பரிபூரணமடைந்துவிட்டன. அல்லாஹ் நமது உம்ராவையும் மற்ற அமல்களையும் ஏற்றுக் கொள்வானாக.

குறிப்பு:- தவாஃபிலும் ஸஃயிலும் ஏழு சுற்றுக்களையும் ஒரே நேரத்தில் சுற்ற முடியாதவர்கள் இடையில் களைப்பாறிவிட்டு பின்பு மீதமுள்ள சுற்றுக்களைத் தொடருவதில் தவறில்லை.

ஹஜ் செய்யும் முறைகள்

ஹஜ்ஜின் வகைகள் மூன்று

1. ஹஜ்ஜுத்தமத்துஃ
2. ஹஜ்ஜுல் கிரான்
3. ஹஜ்ஜுல் இஃப்ராத்

ஹஜ்ஜுத் தமத்துஃ :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் (ஷவ்வால், துல்கஃதா, துலஹஜ்) ஹஜ்ஜுக்கான உம்ராவைச் செய்து அதே வருடத்தில் ஹஜ்ஜையும் செய்வதற்குச் சொல்லப்படும். ஹஜ்ஜுக்குச் செல்லும்போது குர்பானி கொடுக்கும் பிராணியை, தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லாதவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். ஹஜ்ஜுத்தமத்துஃ செய்பவர் உம்ராவை முடித்துவிட்டால் ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்கும் வரை, இஹ்ராமினால் ஹராமாக்கப்பட்டிருந்த அனைத்தும் ஹலாலாகிவிடும், துல்ஹஜ் 8-ஆம் நாள் காலையில் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்கு நிய்யத் வைத்துக் கொண்டு இஹ்ராமை அணிந்து மினாவிற்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜுல் கிரான் :-

ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் சேர்த்து ஒரே நிய்யத்து வைப்பது. யார் தன்னுடன் குர்பானிக்குரிய பிராணியை, கொண்டு செல்கின்றார்களோ அவர்களுக்கு இதுவே சிறந்த முறையாகும். இந்த முறையில்தான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுசெய்தார்கள்.

ஹஜ்ஜுல் இஃப்ராத் :-

இம்முறையில் குர்பானி கடமையில்லை. ஹஜ்ஜுடைய மாதத்தில் ஹஜ்ஜுக்கு மட்டும் நிய்யத்து வைப்பதாகும்.

கிரான் மற்றும் இஃப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்ததும் தவாப் செய்ய வேண்டும். இதற்கு தவாபுல் குதூம் என்று சொல்லப்படும். தவாபுல் குதூமுக்குப் பின் ஸஃயி செய்பவர்கள் 10-ஆம் நாள் தவாபுல் இஃபாலாவுக்குப் பின் ஸஃயி செய்யத்தேவையில்லை. இப்போது ஸஃயி செய்யாதவர்கள் தவாபுல் இஃபாலாவுக்குப்பின் ஸஃயி செய்தே ஆகவேண்டும்.

துல்ஹஜ் பிறை 8-ஆம் நாள்

மேலே கூறப்பட்ட மூன்று முறைகளில் ஹஜ் செய்பவர்களும் துல்ஹஜ் பிறை எட்டாம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். மினாவில் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஸுப்ஹுத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டாக சுருக்கித் தொழவேண்டும். இப்படித்தான் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

துல்ஹஜ் பிறை 9-ஆம் நாள்

துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்தபின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபா சென்றதும் அரஃபா எல்லையை உறுதிப் படுத்தியபின் மஃரிப் தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே தங்கி இருப்பது அவசியமாகும். லுஹருடைய நேரம் வந்ததும் பாங்கும், இகாமத்தும் கூறி லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும். லுஹர் தொழுகை முடிந்ததும் இகாமத் கூறி அஸர் தொழுகையையும் இரண்டு ரக்அத்தாக சுருக்கி லுஹருடன் முற்படுத்தித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. தொழுகை முடிந்ததும் ஓர் இடத்தில் அமர்ந்து வணக்கத்தில் ஈடுபடவேண்டும். அரஃபாவுடைய தினம் மிக, சிறப்பான தினமாகும். ஹஜ் என்றால் அரஃபாவில் தங்குவதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாஜிகளின் இத்தியாகத்தைப் பார்த்து மலக்குகளிடம் அல்லாஹ் பெருமைப்படும் நாளாகும். ஆகவே, அங்குமிங்கும் அலைந்து திரியாமல் உருக்கமான முறையில் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும், உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்நாளில் செய்யும் வணக்கங்களில் மிக மேலானது துஆச் செய்வதாகும்.
நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் (தொழுகையை முடித்து விட்டு,) அரஃபா மலையடிவாரத்தில் நின்றவர்களாக, கிப்லாவை முன்னோக்கி சூரியன் மறையும் வரை துஆச்செய்தார்கள். (முஸ்லிம்)
அந்நாளில் செய்யும் திக்ருகளில் மிகச் சிறந்தது பின்வரும் திக்ராகும். நானும் எனக்கு முன்வந்த நபிமார்களும் கூறியவையில் மிகச் சிறந்தது

لااِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءِ قَدِيْرٍ .

லாஇலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹ், லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி (ஸல்) வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அரஃபாவுடைய எல்லைக்குள் எங்கும் தங்கிஇருக்கலாம். ஜபலுர் ரஹ்மாவிற்க்குப் போய் அங்கிருந்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று நினைத்து, பல சிரமங்களுக்கு மத்தியில் அங்கு சென்று அன்றைய நாளையே வீணாக்கிவிடாமல் கிடைத்த இடத்தில் அமர்ந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் முடியுமான அமல்களைச் செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் ஜபலுர்ரஹ்மா மலைமீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. "நான் இந்த இடத்தில்தான் தங்கினேன், அரஃபாவின் எல்லைக்குள் எங்கும் தங்கலாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்களே அரஃபாவின் எல்லைக்குள் எங்கு தங்கினாலும் ஒரே நன்மைதான் என்று சொல்லியிருக்கும் போது எதற்காக ஜபலுர்ரஹ்மாவிற்குச் செல்ல வேண்டும்? ஹாஜிகள் இதை கவனத்தில் கொள்வது அவசியம்.

குறிப்பு : யார் அரஃபா எல்லைக்கு வெளியில் தங்கி இருக்கின்றாரோ அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படாது, இன்னும் அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்கக்கூடாது.
முஸ்தலிஃபாவில் இரவில் தங்குவது

ஒன்பதாம் நாளின் சூரியன் மறைந்ததும் தல்பியா கூறியவர்களாக அமைதியான முறையில் முஸ்தலிஃபா செல்ல வேண்டும். முஸ்தலிஃபா சென்றதும் ஓர் பாங்கு இரண்டு இகாமத்தில் மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து இஷாவை இரண்டு ரகஅத்தாக சுருக்கித் தொழ வேண்டும். முன் பின் சுன்னத்துக்கள் இல்லை. சுப்ஹுவரை அங்கு தங்குவது அவசியமாகும். முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம்.
நான் இங்குதான் தங்கினேன், முஸ்தலிஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

நோயாளிகள், பெண்கள் நடு இரவுக்குப்பின் அவர்கள் விரும்பினால் மினா செல்லலாம். நபி (ஸல்) அவர்கள் இதை அனுமதித்துள்ளார்கள்.

சுபஹுடைய நேரம் வந்ததும் சுபஹுத் தொழுகையை தொழுதுவிட்டு சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை அல்லாஹ்வை, போற்றிப்புகழ்ந்து அவனைப் பெருமைப்படுத்தக்கூடிய திக்ருகளைக் கூறுவதும்; கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வதும் சுன்னத்தாகும்.

நபி (ஸல்) அவர்கள் மஸ்அருல் ஹராம் என்னும் மலைமீது ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று சூரியனின் மஞ்சள் நிறம் வரும் வரை நின்ற நிலையில் பிரார்த்தனை செய்தார்கள்.(அபூதாவூத்)
இன்னும் ஓர் அறிவிப்பில்:-

அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்ந்து அல்லாஹுவைப் பெருமைப்படுத்தி, ஒருமைப்படுத்தும் திக்ருகளை ஓதினார்கள்.

துல் ஹஜ் பிறை 10-ஆம் நாள்

சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு தல்பியா கூறியவர்களாக மினா வர வேண்டும். 10-ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள்.
1- ஜம்ரத்துல் அகபாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீசுவது.
2- குர்பானி கொடுப்பது.
3- முடி எடுப்பது.
4- தவாபுல் இஃபாலா செய்வது.

சொல்லப்பட்ட வரிசைப்பிரகாரம் செய்வதே சுன்னத்தாகும். ஒன்றைவிட மற்றொன்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ செய்தாலும் தவறில்லை. பத்தாம் நாள் நபி (ஸல்) அவர்களிடம் பல ஸஹாபாக்கள் வந்து ஒன்றை முற்படுத்தி செய்துவிட்டேன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்கும் போதெல்லாம் பரவாயில்லை என்றே நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

கல் எறிவது

பத்தாம் நாள் எறியும் கற்களை காலை சூரிய உதயத்திலிருந்து ளுஹர் நேரத்துக்குள் எறிய வேண்டும். இந்த நேரத்திற்குள் எறிய முடியாதவர்கள் இதற்குப் பின்னும் எறியலாம்.

பத்தாம் நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! மாலையான பின்புதான் நான் கல் எறிந்தேன் என்றார், பரவாயில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி) எறியும் கல்லின் அளவு சுண்டுவிரலால் வீசும் கல் அளவிற்கு இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு கற்களாக "அல்லாஹுஅக்பர்" என்று சொல்லிக் கொண்டு எறிய வேண்டும். ஏழு கற்களையும் ஒரே தடவையில் எறியக்கூடாது.

"சுண்டு விரலால் வீசக்கூடிய கற்களைப் போன்று ஏழு கற்களை நபி (ஸல்) அவர்கள் வீசினார்கள். ஒவ்வொரு கற்களை வீசும் போதும் தக்பீர் கூறினார்கள்" என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூதாவூத், பைஹகி)

கல் எறிவதற்கு முடியாத நோயாளி மற்றும் பலவீனர்களின் கல்லை இன்னும் ஒருவர் அவருக்குப் பகரமாக எறியலாம். ஏறியக்கூடியவர் அவ்வருடம் ஹஜ்ஜு செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய கல்லை எறிந்த பின்புதான் மற்றவரின் கல்லை எறிய வேண்டும். தனக்கு கல் எறிய சக்தி இருக்கும் போது பிறரை எறியச் சொல்லக்கூடாது.

குர்பானி கொடுப்பது

தமத்துஃ மற்றும் கிரான் முறைப்பிரகாரம் ஹஜ் செய்பவர்கள் கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்வுக்காக அறுப்பது. ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தை அல்லது ஒரு மாட்டை அறுக்கலாம். ஆடு கொடுப்பதாக இருந்தால் ஒருவருக்கு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இஃப்ராது முறையில் ஹஜ் செய்தவருக்கு குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. குர்பானியை மினாவிலும், மக்காவின் எல்லைக்குள் எங்கும் அறுக்கலாம், ஆனால் ஹரம் எல்லைக்கு வெளியில் அறுக்கக்கூடாது. "நான் இந்த இடத்தில்தான் குர்பானி கொடுத்தேன். மினாவில் எங்கும் குர்பானி கொடுக்கலாம். மக்காவின் தெருக்கள் எல்லாம் நடக்கும் பாதையும் குர்பானி கொடுக்கும் இடமுமாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

குர்பானி இறைச்சியிலிருந்து அதைக் கொடுத்தவரும் உண்ணலாம்.

குர்பானி கொடுக்கும் இறைச்சியிலிருந்து மினாவுடைய மூன்று நாட்களை (பிறை 11,12,13) தவிர (வேறு நாட்களில்) நாங்கள் உண்ணாமலிருந்தோம். நீங்களும் (அந்த இறைச்சியைச்) சாப்பிட்டு, சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அனுமதித்த போது நாங்களும் சாப்பிட்டோம், சேமித்தும் வைத்தோம். மதீனாவிற்கும் அவ்விறைச்சியை கொண்டு செல்லும் அளவு எங்களிடம் இருந்தது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்) குர்பானி கொடுப்பதற்கு வசதியற்றவர் ஹஜ்ஜுடைய நாட்களில் மூன்று நோன்புகளும், ஊர்; திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும்.

தலை முடி எடுப்பது

குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுக்க வேண்டும். (முடி எடுக்கும் முறை முன்னால் சொல்லப்பட்டுவிட்டது) முடியை எடுத்ததும் இஹ்ராமிலிருந்து நீங்கிக் கொள்ளலாம். அதாவது கணவன் மனைவி தொடர்பைத்தவிர இஹ்ராத்தினால் தடுக்கப்பட்டிருந்தவைகள் எல்லாம் ஆகுமாகிவிடும். தவாபுல் இஃபாலாவைச் (ஹஜ்ஜுடைய தவாபை) செய்துவிட்டால் கணவன் மனைவி உறவும் ஆகுமாகிவிடும்.

தவாபுல் இபாலா

தலை முடி எடுத்த பின் குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும். தமத்துஆன முறையில் ஹஜ் செய்பவர்கள் தவாபுல் இஃபாலாவை முடித்துவிட்டு ஹஜ்ஜுக்கான சஃயும் செய்ய வேண்டும். கிரான் மற்றும் இஃப்ராதான முறையில் ஹஜ் செய்பவர்கள் மக்கா வந்தவுடன் செய்த தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்திருந்தால் இப்போது தவாபுல் இஃபாலா மாத்திரம் செய்தால் போதும், சஃயி செய்யத் தேவையில்லை. தவாபுல் குதூமுக்குப் பின் சஃயி செய்யவில்லையென்றால் இப்போது (தவாபுல் இஃபாலாவுக்குப் பின்) சஃயி செய்தே ஆக வேண்டும். தவாப் மற்றும் சஃயை முடித்ததும் மினா சென்று 11-ஆம் இரவில் மினாவில் தங்குவது அவசியமாகும்.

துல் ஹஜ் பிறை 11-ஆம் நாள்

11-ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். முதலில் சிறிய ஜம்ராவிற்கும், இரண்டாவது நடு ஜம்ராவிற்கும், மூன்றாவது பெரிய ஜம்ராவிற்கும் எறிய வேண்டும். முதலாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் வலது பக்கம் சற்று முன்னால்; சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். இரண்டாவது ஜம்ராவிற்கு கல் எறிந்த பின் இடது பக்கம் சற்று முன்னால் சென்று கிப்லாவை முன்னோக்கி துஆச் செய்வது சுன்னத்தாகும். மூன்றாவது ஜம்ராவிற்க்குப்பின் துஆச் செய்வது சுன்னத்தல்ல.

துல் ஹஜ் பிறை 12-ஆம் நாள்

12-ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும். 12-ஆம் நாளும் 11-ஆம் நாளைப் போன்றே மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் நேரத்திற்குப் பின் கல் எறிய வேண்டும். 12-ஆம் நாளோடு ஹஜ்ஜுக் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும். 13-ஆம் நாளும் மினாவில் தங்க விரும்புபவர்கள் 13-ஆம் இரவும் மினாவில் தங்கிவிட்டு 13-ஆம் நாள் ளுஹர் நேரத்திற்க்குப் பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல் எறிந்துவிட்டு மக்கா செல்ல வேண்டும். 10,11,12,13-ஆம் நாட்களில் மினாவில் ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழ வேண்டும். நான்கு ரக்அத்துத் தொழுகைகளை இரண்டு ரக்அத்துக்களாக, சுருக்கித் தொழ வேண்டும். மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் தவாப் மற்றும் தொழுகையைத்தவிர ஹஜ்ஜுடைய மற்ற எல்லா அமல்களையும் செய்யலாம். சுத்தமானதும் விடுபட்ட தவாபை நிறைவேற்ற வேண்டும்.
தவாபுல் விதா

ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன்வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் விதாவாகும். தவாபுல் விதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும். தவாபுல் இஃபாலாவை முடித்த ஒரு பெண் மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தத்தின் காரணமாக தவாபுல் விதாவைச் செய்ய முடியாவிட்டால் அப்பெண்ணிற்கு மாத்திரம் தவாபுல் விதாவை விடுவதற்கு அனுமதி உண்டு. மற்ற எல்லா ஹாஜிகளும் அதை நிறைவேற்றுவது அவசியமாகும். மக்காவிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசியாக தவாபுல் விதாவைச் செய்ய வேண்டும். தவாபுல் விதா முடிந்ததும் பயணத்தைத் தொடங்க வேண்டும். இத்துடன் ஹஜ் கடமை முடிவடைகின்றது. சிலர் தவாபுல் விதாவை செய்து விட்டு கல் எறிகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். அவர் மீண்டும் தவாபுல் விதா செய்ய வேண்டும். இன்னும் சிலர் தவாபுல் விதாவை முடித்துவிட்டுச் செல்லும் போது கஃபாவை பார்த்துக் கொண்டே பின்னோக்கி வருகின்றார்கள், இதுவும் தவறாகும். அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ் கடமைகளையும் ஏற்று அன்று பிறந்த பாலகனைப் போன்று தன் தாயகம் திரும்ப நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக!
இஹ்ராம் அணிந்தவர் தவிர்க்க வேண்டியவைகள்

1-உடலிலுள்ள முடியையோ, நகங்களையோ எடுப்பது.
2-உடல், ஆடைகள், உணவு, குடிபானம் ஆகியவைகளில் மணம் பூசுவது.
3-பூமியிலுள்ள உயிர்ப்பிராணிகளைக் கொல்வது அல்லது வேட்டையாடுவது, விரட்டுவது.
4-இஹ்ராமிலும், இஹ்ராமில்லாத நிலையிலும் ஹரமின் எல்லைக்குள் உள்ள மரம் செடிகளை வெட்டுவது.
5-தவறி விடப்பட்ட பொருட்களை எடுப்பது. ஆனால் உரியவர்களிடம் கொடுக்க முடியுமாக இருந்தால் மட்டும் எடுக்கலாம்.
6-இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்யவோ, அல்லது முடித்து கொடுக்கவோ, தனக்கோ அல்லது பிறருக்கோ திருமணம் பேசவோ கூடாது. இன்னும் பெண்ணுடன் உடலுறவு கொள்வது, காம உணர்வோடு கலந்துரையாடுவதும் கூடாது.

ஹஜ்ஜுடைய நேரத்தில் உடலுறவு கொண்டால் அந்த ஹஜ்ஜு சேராது. அதற்கு பரிகாரமாக ஓர் குர்பானி கொடுப்பதுடன் அடுத்த வருடம் மீண்டும் ஹஜ்ஜு செய்ய வேண்டும்.

ஆண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்தலையை,
துணி போன்றவைகளால் மறைப்பது, சட்டையையோ அல்லது தையல் போடப்பட்ட எந்தவித உடைகளையோ உடம்பில் எந்த இடத்திலாவது அணிவது.
பெண்கள் மீது மாத்திரம் விலக்கப்பட்டவைகள்
இஹ்ராமுடைய நிலையில் பெண்கள் கையுறை அணிவது,
முகத்தை புர்காவால் மூடுவது கூடாது. ஆனால் அன்னிய ஆண்களுக்கு முன் இருக்கும் போது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்.

அர்கானுல் ஹஜ் (ஹஜ்ஜின் கடமைகள்)

இவைகளைச் செய்யாமல் ஹஜ்ஜுநிறைவேறாது.

1-நிய்யத் வைப்பதோடு இஹ்ராம் உடை அணிதல்.
2-அரஃபாவில் தங்குதல்.
3-தவாபுல் இஃபாலா செய்தல்.
4-ஸஃபா மர்வா மலைக்கு மத்தியில் ஹஜ்ஜுடைய ஸஃயி செய்தல்.

ஹஜ்ஜுடைய வாஜிபுகள் (அவசியமானவைகள்)

(1) நபி (ஸல்) அவர்கள் கூறிய எல்லையிலிருந்து இஹ்ராம் அணிதல்.
(2) சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்கி இருத்தல்.
(3) 10-ஆம் இரவு முஸ்தலிஃபாவில் தங்குதல்.
(4) 10-ஆம் நாள் காலையில் பெரிய ஜம்ராவிற்கு ஏழு கற்களும், 11, 12-ஆம் நாட்கள் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழேழு கற்கள் வீதம் எறிதல், 13-ஆம் நாள் மினாவில் தங்குபவர்கள் 13-ஆம் நாளும் கல்லெறிய வேண்டும்.
(5) ஆண்கள் முடியை மழிப்பது அல்லது கத்தரிப்பது. பெண்கள் முடியின் நுனியில் விரலின் நுனியளவு கத்தரிப்பது.
(6) 11, 12-ஆம் இரவில் மினாவில் தங்குவது. (13-ஆம் நாள் விரும்பியவர்கள் மினாவில் தங்கலாம். இந்த இரவு தங்குவது அவசியமில்லை, ஆனால் சிறந்தது.)



(ஹஜ் செய்யும் போது) கெட்ட செயல்களில் ஈடுபடாமலும், தன் மனைவியோடு இல்லற உறவில் ஈடுபடாமலும் யார் ஹஜ் செய்கின்றாரோ அவர் அன்று பிறந்த பாலகரைப்போன்று (தன் தாயகம்) திரும்பிச் செல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்


நன்றி: C.O.C.G வெளியீடு, ஜித்தா

ரமளான் மாதத்தின் சிறப்புகள்


முன்னுரை

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.


1. திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், 'அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது' என்ற சிறப்பைப் பெறுகிறது.
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:


( شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ )


'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'.

(அல்குர்ஆன் 2 : 185)


2. நோன்புக்குரிய மாதம்.


உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
அல்லாஹ் சொல்கிறான்:


( فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ )


'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)


3. சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.

إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ


'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,


وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ


'..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)
முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.
அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்.
மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.


4. வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.


إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء


'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)
வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:


(وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا )


'வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும'; - (அல்குர்ஆன் 78 : 19)
ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.


5. அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.


إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ


'ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'.... - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)
அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.


6. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படும் மாதம்.


وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ


'....நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....' - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1956)
மற்றொரு நபிமொழியில்,


وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ


'...நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...' நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)


7. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.


وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ


'....ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்'. - நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)


8. நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.


وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ


'...நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)மற்றொரு அறிவிப்பில் 'ஒரு வானவர் அழைக்கிறார்' என்று வந்துள்ளது.


9. நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.


وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ


'...நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்...' - நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 618, இப்னுமாஜா 1642)


10. லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்.


ஆயிரம் மாதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது.


تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ


'...ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புஹாரி, முஸ்லிம், திர்மிதி - 722)


11. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்.


مَنْ صَامَ رَمَضَانَ وَقَامَهُ إيْمَانًا وَاحْتِسَابًا غُفِّرَ لَهُ مَاتَقَدَّمَ مِنْ ذَنْبِهِ


'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)


12.தக்வா பயிற்சிக்குரிய மாதம்


தக்வா எனும் இறையச்சத்தை பெறுவதற்கு சிறந்த பயிற்சியளிக்கும் மாதம். அல்லாஹ் சொல்கிறான்.


( يَأَيُّهَا الَّذِيْنَ اَمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ )


'ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் தக்வா உடையோராகலாம்'. (அல்குர்ஆன் 2:184)


13. அருள் செய்யப்பட்ட மாதம்.

قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارَكٌ


'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)


முடிவுரை
மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!

ரமழானை வரவேற்போம்


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.'இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்' (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். 'பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

  • ரமழான் மாதத்தின் சிறப்பு: 'ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்' (அல்பகரா 2: 185).
  • 'ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்' (புஹாரி)..

    இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.
  • இரண்டாவது சிறப்பு: 'ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
  • மூன்றாவது சிறப்பு: 'ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
  • நான்காவது சிறப்பு: 'ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  • ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

  1. 1-நோன்பு பரிந்து பேசும்: 'நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், 'நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக'! அல் குர்ஆன் கூறும் 'நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).
  2. 2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: 'நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை' என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).
  3. 3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: 'ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
  4. 4-நோன்பின் கூலி சுவர்க்கம்: 'நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
  5. 5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: 'எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
  6. 6-'நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).
  7. 7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: 'எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).
  8. 8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: 'வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
  9. 9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: 'நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).
  10. 10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: 'எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

  • ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்
  • நிய்யத்தின் அவசியம்: 'எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

    பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், 'நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா' ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். 'நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

    நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.
  • ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: 'நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).'
  • நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).'
  • ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

    முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.
  • ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:'

  • எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

  • நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்' என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

  • நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:


ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ


  • 'தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'
  • பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது' இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

  • ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

  • 'எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

  • இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது' என கூறினார்கள். (புஹாரி).
  • 'எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

  • உம்ராச் செய்வது:

  • 'எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

  • ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

    அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

    'நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்' (புஹாரி).

  • ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:
  • பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.
  • 'எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).
  • 'எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).
  • நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!

ஆமீன்

 

Copyright All Rights Reserved வழுத்தூர் ஆன்லைன் by Mohamed Brother`s